Latestமலேசியா

குடியுரிமை மீதான உத்தேச சட்டத் திருத்தம்: தொடர் கலந்தாய்வுகள் அவசியம் என மஇகா வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 23 – குடியுரிமை தொடர்பில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்பாக முழுமையான ஆய்வரங்கு அவசியம் என மஇகா கருதுகிறது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க போதுமான கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவு கேட்டுக் கொண்டது.

அந்த உத்தேச சட்டத் திருத்தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களையும் மஇகா சுட்டிக் காட்டியுள்ளதோடு அது தொடர்பில் பரிந்துரைகளையும் முன் வைத்துள்ளது.

குறிப்பாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் ‘நிரந்தரவாசிகள்’ என்ற விதி நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அதனை நீக்குவதற்கு பதிலாக, மலாய் மொழியாற்றல் உள்ளிட்ட சில கடுமையான நிபந்தனைகளை வைக்கலாம்; எனினும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அந்த மலாய் மொழியாற்றலின் அளவுகோல் வைக்கப்பட வேண்டும் என மஇகா பரிந்துரைத்துள்ளது.

‘நிரந்தரவாசிகள்’ என்ற விதியை நீக்கி விட்டால், அவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமைக் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்பதை அக்கட்சி சுட்டிக் காட்டியது.

அதோடு, Operasi Undang-Undang என்ற சொல்லும் நீக்கப்படக் கூடாது; வீசப்பட்ட குழந்தைகள், திருமண உறவுக்கு வெளியே பிறந்த குழந்தைகள், பூர்வக்குடி குழந்தைகள் போன்றோரின் நலன் மற்றும் உரிமைகளைக் காக்க அது மிக அவசியம் என ம.இ.கா தெரிவித்தது.

இவ்வேளையில், ‘திருமண நாள்’ என்ற விதியை ‘குடியுரிமைப் பெற்ற நாள்’ என மாற்றும் முடிவையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; காரணம், அவ்வாறு மாற்றி விட்டால், வெளிநாட்டைச் சேர்ந்த மனைவி, குடியுரிமைக் கிடைத்த நாளில் இருந்து இரண்டாண்டுகளுக்கு கணவருடன் இங்கு வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டி வரும் என மஇகா சுட்டிக் காட்டியது.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பை 21-ல் இருந்து 18-க்கு குறைத்து விட்டால், விண்ணப்பத்திற்கான கால நேரமும் குறையும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தங்களை வெறும் நாட்டின் பாதுகாப்பு கோணத்தில் மட்டும் பார்க்காமல், மனிதநேய அடிப்படையிலும் பார்கக வேண்டும்; நாட்டின் கொள்கைகளால் அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என ம.இ.காவின் சட்டப் பிரிவு கேட்டுக் கொண்டது.

ம.இ.காவின் சட்டப் பிரிவின் புதியத் தலைவராக டத்தோ செல்வ மூக்கையா நியமிக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!