
கோலாலம்பூர், நவம்பர்-2,இரு குழந்தைகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பேரங்காடி ஒன்றில் ஆடவரும் மாதுவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், 36 வயது ஆடவர் ஒருவர் தனது 7 வயது மகனுடனும், 2 வயது மகளுடனும் நடந்துசென்றுகொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அவரது மகனைப் பின்னாலிருந்து தள்ளியதில் சிறுவன் கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது 2 வயது மகளின் தலையின் பின்பகுதியில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய 35 வினாடி வீடியோவில், ஆடவர் பெண்ணைத் தள்ளுவதும், அதற்குப் பதிலடியாகப் பெண் அவரை கன்னத்தில் அறைவதும் பதிவாகியுள்ளது.
பின்னர், அந்த ஆடவரும் பெண்ணை அறைந்ததில், அவர் கீழே விழுந்தது வீடியோவில் தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, குழந்தைகளின் தந்தை நேற்றிரவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் Ahmad Azwan Amin Nordin தெரிவித்தார்.



