குவாலா பெராங், அக்டோபர்-6, திரங்கானு, குவாலா பெராங்கில் உடல் முழுவதும் வீங்கி, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்த முதியவரை, காட்டு யானை மிதித்திருக்கலாமென நம்பப்படுகிறது.
65 வயது மூசா அஹ்மாட்டின் (Musa Ahmad) நெஞ்சு, தலை, மற்றும் கைகளில் பலத்த காயமேற்பட்டது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அதை வைத்துப் பார்க்கும் போது, கனமான பொருளொன்றால் அழுத்தப்பட்டது அதாவது ஒரு காட்டு யானையால் அம்முதியவர் மிதிபட்டிருக்கலாமென, உலு திரங்கானு போலீஸ் தலைவர் சை’னுல் முஜாஹிடின் மாட் யூடின் (Zainul Mujahidin Mat Yudin) தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை காலை தோட்டத்துக்குக் கிளம்பி போனவரை இரவாகியும் காணவில்லையென குடும்பத்தார் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 7.15 மணி வாக்கில், அவரின் தோட்டத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், TNB கேபிள்களுக்கு அடியில் அவர் இறந்துகிடந்தார்.
அச்சம்பவத்தை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ள போலீஸ், அங்கு காட்டு விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்டால் உடனடியாக தங்களிடமோ அல்லது வனவிலங்குத் துறையிடமோ தெரியப்படுத்துமாறு கிராம மக்களை அறிவுறுத்தியது.
காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத்து பயிர்கள் நாசமாவதாக, மூசாவை மேற்கோள் காட்டி கடந்த வாரம் தான் பத்திரிகைகளில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது