
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கெடாவை சூதாட்டமற்ற மாநிலமாக ஆக்குவதற்கு வாய்ப்புகள் இன்னும் இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் சனுசி நோர் சூசகமாகக் கூறியுள்ளார். சூதாட்ட உரிமங்கள் வழங்குவது மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மாநில அரசின் முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும் வேறு வழி நிச்சயம் இருக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.
அடுத்து எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பாக அமையக்கூடாது என்பதற்காக அவற்றை முதலில் மாநிலத்தின் வழக்கறிஞர்கள் மூலம் நுணுக்கமாக ஆய்வு செய்வது அவசியம். விளைவுகள் என்ன, எவை நம்மைக் கட்டுப்படுத்துகின்றன, எதைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பதை வழக்கறிஞர்கள் விளக்குவார்கள். ஆகவே முன்னோக்கிச் செல்வதற்கான வழி இன்னும் இருக்கலாம் என Balingங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்குப் பிறகு அவர் கூறியதாக Utusan Malaysia செய்தி வெளியிட்டுள்ளது.
சூதாட்ட நிலையங்களுக்கான புதிய உரிமங்களை வெளியிடுவது குறித்து மாநில அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. சூதாட்டத்தில் ஈடுபட யாருக்கும் விருப்பம் இல்லையென்றால், அதைத் திறக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேவை இல்லையென்றால், அதற்கு அவசியமும் இருக்காது என சனுசி குறிப்பிட்டார்.
மாநில அரசின் நிலைப்பாடு முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறப்படுவதற்கு பதிலளித்த அவர், அக்கொள்கையை எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரான பாகுபாடாகப் பார்க்கக் கூடாது என்றார். சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், முஸ்லிம்களும் அத்தகைய இடங்களுக்குச் செல்லக்கூடும் என்ற கவலையையும் அவர் வெளியிட்டார்.
பூல் பந்தயம் மற்றும் லாட்டரி நடத்துநர்களுக்கான உரிமங்களைப் புதுப்பிக்க மறுப்பதை எதிர்த்த கெடா மாநில அரசின் முயற்சியை, கூட்டரசு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 12 அன்று நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.



