கோலாலம்பூர், நவம்பர்-26 – கெடா மாநிலத்துக்கு வர வேண்டிய முதலீடுகளை மத்திய அரசு ஒருபோதும் கெடுத்ததில்லை.
அது போன்ற கீழறுப்பு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லையென, முதலீடு-வாணிபம்-தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சா’ஃவ்ருல் அப்துல் அசிஸ் (Tengku Datuk Seri Zafrul Abdul Aziz) கூறியிருக்கிறார்.
உண்மையில் கெடாவுக்கு ஏராளமான முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளோம் என, தனது X தளத்தில் அவர் சொன்னார்.
அண்மையில் கூட, கொரியாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான சந்திப்புக்குப் பிறகு, ஹியூண்டாய் மோட்டார் நிறுவனம் (Hyundai Motor Company) கெடா, கூலிமில் கூடுதலாக 2.16 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை அறிவித்தது.
கூலிமில், மின்சார வாகனங்கள் உட்பட உள்ளூர் வாகனப் பாகங்களைப் பொருத்துவதற்கு ஹியூண்டாய் திட்டமிட்டுள்ளதாக சா’ஃவ்ருல் சொன்னார்.
கெடாவில் தனியார் துறையின் முதலீடுகளைக் கெடுப்பதற்கு ஒரு பெரிய சதித்திட்டமே நடப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி மொஹமட் நோர் (Datuk Seri Sanusi Md Nor) முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
அறிவித்த திட்டங்களிலிருந்து விலகிக் கொள்ளுமாறு முதலீட்டு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
அனைத்துலக முதலீட்டு நிறுவனமான Bin Zayed International Group of Companies (BZI), லங்காவியில் 40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான லங்காசுகா (Langkasuka) திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொண்டது குறித்து பேசிய போது சனுசி அவ்வாறு கூறினார்.