
அலோர் ஸ்டார், அக்-28-சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் உள்ள, ‘Bomba’ என்ற எழுத்துடன் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்ட தனியார் வாகனம், தங்களுடையது அல்ல என கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. அதோடு அவ்வாகனம் மாநிலத்திலுள்ள எந்தவொரு தன்னார்வத் தீயணைப்புப் படைக்கும் சொந்தமானதல்ல என அத்துறை உறுதிப்படுத்தியது.
அவ்வாகனம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், துறையின் அடையாளத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியது தொடர்பில் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது அறிக்கையொன்றில் கூறியது.
தீயணைப்புத் துறையின் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அத்துறை, அத்தகைய செயல்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன், தீயணைப்புச் சேவையின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என எச்சரித்தது. மேலும், அவ்விவகாரம் குறித்து தகவல் வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என அது தெரிவித்தது.
இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவிய ஐந்து விநாடி காணொளியில், ‘Bomba’ என்ற எழுத்துடன் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்ட தனியார் வாகனம் ஒன்று, சுங்கை பட்டாணியில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற காட்சிகள் உள்ளன. அதனால் பிற வாகனங்களுடன் மோதும் அபாயம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.



