
கோலாலாம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரில் புகழ்பெற்ற கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மாபெரும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தற்போது திருப்பணி வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயம் முழுமையாகக் கருங்கல்லால் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.
இந்த திருப்பணிகளை முன்னிட்டு, ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இன்று பாலாலய வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய தான் ஸ்ரீ நடராஜா, திருப்பணிகள் செவ்வனே நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இதனிடையே விழாவுக்குப் பிறகு வணக்கம் மலேசியாவிடம் பேசிய அவர், மூலஸ்தானத்தில் இருக்கும் விநாயகர் பெருமான் தற்காலிகமாக வழிபாட்டுக்கு மூடப்படுவாதகவும், ஆனால் பக்தர்கள் தொடர்ந்து தடையின்றி வழிபட ஏதுவாக, அத்தி மரத்தினால் ஆன விநாயகப் பெருமான் ஆலயத்தின் முன்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
எனவே, பக்தர்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் வழிபடலாம் என்றார் அவர்.
திருப்பணிகள் முடிந்து வரும் விநாயகர் சதுர்த்திக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள் அடுத்த ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் கூட்டத்தில் இறுதிச் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் நடராஜா கூறினார்.
நன்கொடைகள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கும்பாபிஷேகத்தின் போது இந்த கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம் பிரமாண்டமாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கும் என்றார்.
இன்றைய பாலாலய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையின் தலைவருமான டத்தோ என். சிவகுமார், தேவஸ்தான நிர்வாகத்தினர், பக்தர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.



