
ஶ்ரீ செண்டாயான், ஜூன்-22- நாட்டின் முன்னணி பாலர் கல்வி நிறுவனமான சன்ஷைன் கல்விக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு தின விழா நேற்று மிக விமரிசையாகவும் நடைபெற்றது.
650-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
இதனிடையே, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இயங்கி வரும் தங்களின் அனைத்து கிளைகளின் மாணவர்களும் ஒன்றிணைந்து கலந்துகொண்ட இவ்வாண்டு விளையாட்டு விழா மிகுந்த வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது.
மாணவர்களின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் பெரும் பங்காற்றுவதாக சன்ஷைன் கல்விக்குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பான ஏற்பாடுகளை சன்ஷைன் கல்விக்குழுமத்தின் மூத்த முதல்வர் பரமேஸ்வரி மனோகரன், மூத்த மேலாளர் நூர் ஷாலினா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
சன்ஷைன் கிட்ஸ் பாலர் பள்ளி மலாய், சீனர், இந்தியர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கல்வி பயிலும் பன்முகக் கலாச்சார கல்வி நிலையமாகத் திகழ்வதோடு, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் முன்னணி பாலர் பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது.
விளையாட்டு விழாவில் மாணவர்களுக்காக மட்டுமன்றி பெற்றோர்களுக்கான சிறப்பு போட்டிகள், குடும்ப விளையாட்டுகள் மற்றும் தம்பதியர் என மொத்தம் 13 வகையான போட்டிகளும் நடத்தப்பட்டன.
இவ்வாண்டு நடைபெற்ற போட்டிகளில் சிவப்பு இல்லம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த இவ்விளையாட்டு விழா அனைவரின் பாராட்டுகளையும் பெற்று இனிதே நிறைவுற்றது.
இவ்வேளையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பருவத்திற்கான புதிய மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருவதாகவும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஷ்யாம் பிரசாத் தெரிவித்தார்.



