
கோலாலம்பூர், நவ-02-Sungai Besi, Desa Tun Razak பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அச்சம்பவம் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் அங்குள்ள உணவகமொன்றின் முன் நிகழ்ந்தது.
வணிக எல்லை தொடர்பான தகராறே அக்கலவரத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும், Sungai Besi சகாவல் நிலையத்தின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு (URB), செராஸ் மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை (CID) மற்றும் மாவட்ட காவல் தலைமையகத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
சம்பவ இடத்திற்கு அருகிலேயே 16 முதல் 44 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக Fadil தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு, கடுமையான குற்றச் செயல்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பின்னணிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அவர்கள், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148இன் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, ஆரூடங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் காவல்துறை அவசர அழைப்பு எண் 03-2115 9999 அல்லது செராஸ் மாவட்ட காவல் தலைமையகத்தை 03-9205 0445 / 465 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



