
கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூரில் உள்ள பல பரபரப்பான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான வீலி சாகசங்களைச் செய்ததாக நம்பப்படும் வயதுக்குறைந்த நால்வர் உட்பட ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவங்கள் மே 23 ஆம் தேதியன்று அதிகாலை மணி 3.30 க்கு நடந்ததாகவும், ஆனால் இந்த சாகசங்கள் அடங்கிய வைரல் வீடியோ மே 31 ஆம்தேதிதான் வெளிவந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறைத் தலைவர் சும்சுரி இசா (Zamzuri Isa) தெரிவித்தார்.
44 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஜாலான் ராஜா லாவுட் , ஜாலான் துன் ரசாக் மற்றும் ஜாலான் பி. ரம்லி ஆகிய சாலைகளில், பின்னால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை மணி 3.20 மணியளவில், 20 வயது இளைஞரான
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்த 16 வயது பெண் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று அதிகாலை மணி 12.54 க்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கையில், 17 மற்றும் 16 வயதுடைய மேலும் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளும் , அவர்களுடன் பின்னால் அமர்ந்திருந்த 18 மற்றும் 15 வயதுடைய பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
வைரலான அந்த வீடியோவில் இந்த ஆறு பேரும் சம்பந்தப்பட்டிருந்ததாக போலீஸ் துறை நம்புகிறது.
சந்தேக நபர்களில் நால்வர் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அலட்சியமாகவும் அபாயகரமாகவும் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்சுரி இசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



