கோலாலம்பூர், அக்டோபர்-4 – கோலாலம்பூரில் வெளிநாட்டினருக்கு சிகிச்சையளிப்பதற்காகவே செயல்பட்டு வரும் 2 சட்டவிரோத கிளினிக்குகள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது, எவ்வித தகுதியுமில்லாமல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு நோயாளிகளுக்கு ‘சிகிச்சையளித்த’ இரு வங்காளதேசிகள் கைதாகினர்.
குடிநுழைவுத் துறையும், கோலாலம்பூர்-புத்ராஜெயா சுகாதாரத் துறையின் மருந்தகப் பிரிவும் நடத்திய Op Mahir சோதனையில், அருகருகே அமைந்திருந்த ‘கிளினிக்குகளில்’ இருவரும் சிக்கினர்.
24 வயது இளைஞன் உள்ளிட்ட அந்த இரு ஏமாற்றுக்காரர்களும் சுற்றுலா சேவைத் தளம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக ‘கிளினிக்’ நடத்தி வந்துள்ளனர்.
சிகிச்சைத் தேவைப்படுவோர் walk-in முறையில் அவர்களைத் தேடி வந்தால் 50 முதல் 80 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகளும் அச்சோதனையின் போது கைப்பற்றப்பட்டன.