
கோலாலம்பூர், ஜூன் 26 – வாசனைத் திரவிய முதலீடு மோசடியில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட அறுவர் , கோலாலம்பூர் ஈக்கோ சிட்டியில் (KL Eco City) உள்ள வளாகத்தில் நேற்று போலீஸ் நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்டனர்.
செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்
புலனாய்வுப் பிரிவு மற்றும் கோலாலம்பூர் வர்த்தக புலனாய்வுத் துறை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் மக்களை இலக்காகக் கொண்டு செயல்பட்ட இந்தக் கும்பலின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில், கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் பஸ்ரி சகோனி ( Basri Sagoni) கூறினார்.
23 முதல் 47 வயதுடைய அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஏமாற்றியது தொடர்பாகவும் தண்டனை சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்பாக இருக்கும்படி பஸ்ரி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.



