கோலாலம்பூர், ஏப் 1 – சிலாங்கூரில் Kuala Kubu Baru சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவரை பெரிக்காத்தான் நேசனல் நிறுத்த வேண்டும் என இந்தியர்கள் சார்பில் வலுவான கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அந்த சட்டமன்ற தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய King Makers ஆக இந்திய வாக்காளர்கள் இருப்பதால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென உரிமை கட்சியின் இடைக்கால தலைவரும், பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சருமான
டாக்டர் பி.ராமசாமி கேட்டுக்கொண்டார். மார்ச் 21ஆம் தேதி கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP யின் Lee kee Hiong புற்று நோயினால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு இந்திய வேட்பாளர் ஒருவரை பெரிக்காத்தான் நேசனல் அறிவிக்க வேண்டும். இம்முறை DAP வேட்பாளரின் தேர்வு தவறாக இருந்தால் , அந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் களமிறக்கும் இந்திய வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ராமசாமி தெரிவித்தார். இம்முறை கோலாகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் மலாய்க்காரர் அல்லது சீக்கியர் ஒருவரை DAP வேட்பாளராக நிறுத்தும் என தாம் கேள்விப்பட்டதாகவும் அந்த முடிவு விவேகமானதாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முக்கியமாக பெரிக்காத்தான் நேசனல் ஆதரவாளர்களாக இருக்கும் மலாய்க்காரர்கள் DAP யின் தேர்தல் வியூகத்தினால் திசைதிருப்பப்படுவார்கள் என்று தாம் சந்தேகிப்பதாக ராமசாமி கூறினார்.
ஒரு சீக்கிய வேட்பாளரை நிறுத்துவது இந்திய மக்களுக்கு, பெரும்பாலும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். அதோடு பக்காத்தான் ஹரப்பானுக்கான இந்தியர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. கடந்த மாநில தேர்தல்களில், சுமார் 25 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரிப்பதில் இருந்து விலகிவிட்டனர். செல்வாக்கு உள்ள சில இந்தியர்கள் ஏற்கனவே பெர்சத்து கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதையும் ராமசாமி சுட்டிக்காட்டினார். கோலா குபு பாருவில் உள்ள உள்ளூர் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தை கையாளும் விவகாரத்தில் சினம் அடைந்திருப்பதாகவும் ராமசாமி கூறினார். கோலா குபு பாருவில் வாக்களிக்கும் மக்களில் இந்தியர்கள் 18 சதவீதமாக இருந்தாலும், ஒரு இந்திய வேட்பாளரை நிறுத்தவேண்டும் DAP யின் சிந்தனையில் உதிக்கவில்லை . இனவாதத்தைப் பற்றி அடிக்கடி பேசும் DAP க்கு நாட்டில் உள்ள இந்தியர்களை மதிக்க வேண்டும் என்பது கோலா குபு பாருவில் உள்ள இந்திய மக்கள்தொகையின் சில பிரிவினர் ஒரு முன்கூட்டியே அறிந்திருப்பதாகவும் டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.