
கோலா திரங்கானு, ஜூலை.29 -Kuala Terengganuவில் இரண்டாம் படிவ மாணவி பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழ முயன்ற சம்பவத்தில் பகடி வதை அம்சம் ஏதும் கண்டறியப்படவில்லை. மாறாக அம்மாணவிக்கு skizofrenia எனும் மனச்சிதைவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
14 வயதான அம்மாணவிக்கு கடந்த மே மாதம் அந்த மன பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரது பெற்றோருக்கும் பள்ளிக்கும் அவரது நிலை குறித்து தெரியும் எனவும் திரங்கானு காவல் துறைத் தலைவர் Datuk Mohd Khairi Khairudin கூறினார்.
அம்மாணவி Kuala Terengganuவில் உள்ள Sultana Nur Zahirah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் கடைசியாக ஜூலை 14-ஆம் தேதி சிகிச்சை பெற்றுள்ளார். அடுத்த கட்ட சிகிச்சை செப்டம்பர் 15-ஆம் தேதி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் இதற்கு முன் அம்மாணவிக்கு ஆலோசகச் சேவை வழங்கியுள்ளது. அதோடு அம்மாணவியின் பெற்றோருடனும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு இருந்தது.
அதேவேளை பள்ளி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. வகுப்பறையைத் தரைத் தளத்திற்கு மாற்றுவது, ஆசிரியர்களைக் கொண்டு கண்காணிப்பது, சக மாணவர்களை எப்போதும் அவருடன் இருக்குமாறு அறிவுறுத்துவது ஆகியவையும் அவற்றில் அடங்கும் என Mohd Khairi குறிப்பிட்டார்.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் அம்மாணவி பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழ முயன்றார். எனினும் இறுதியில் காப்பாற்றப்பட்டார்.



