
சிரம்பான், ஜூலை-26-ஆகஸ்ட் 1 நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் BN-PN புரிந்தணர்வுக்கு இந்தியச் சமுதாயம் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அழைப்பு விடுத்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பானை வீழ்த்தும் யுக்தியாக மொத்தமுள்ள 36 தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளிலும், எஞ்சிய 11 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், BN-PN கூட்டணி வெற்றி பெற்றால், மாநில அரசில் 2 இந்தியர்கள் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அளித்த உறுதிமொழியை MIPP தலைவர் பி. புனிதன் வரவேற்றார்.
நெகிரி இந்தியச் சமுதாயத்திற்கு முறையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, அவர்களின் நீண்டகாலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்த வாக்குறுதி மிக முக்கியப் படியாகும் என, இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாநில நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் இந்தியர்களின் குரல் ஒலிப்பதை உறுதிச் செய்ய இந்திய வாக்காளர்கள் BN-PN புரிந்தணர்வை ஆதரிக்க வேண்டும் என MIPP வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் சார்பில் ம.இ.கா வேட்பாளர்கள் இருவர் போட்டியிடும் வேளை, பெரிக்காத்தான் சார்பில் MIPP, WAWASAN மற்றும் பாஸ் கட்சியின் ஆதரவாளர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூவர் போட்டியிடுகின்றனர்.
டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் தலைமையிலான நெகிரி மாநில அரசில் பக்காத்தான் ஹராப்பானின் J. அருள்குமார், S. வீரப்பன் என இரு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



