
கோலாலம்பூர், ஏப்ரல்-17-சமூக ஊடகங்களில் சினமூட்டும் மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிடுவது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும், 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியதாக, 30 வழக்குகள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் தற்போதைய கொள்கைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து பொது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் கருத்துக்கள் பதிவிடப்படுவது அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுடன், ஆரோக்கியமற்ற இணையச் சூழலையும் உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பரப்பவோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல என்று குமார் நினைவுறுத்தினார்.
சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொது மக்கள் சமூக வலைத்தளங்களை முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.



