Latestமலேசியா

சமூக ஊடகத்தில் block செய்ததால் பெண்ணின் கையை முறுக்கிய ஆடவன்; அபராதம் விதித்து எச்சரித்த நீதிமன்றம்

பத்து பஹாட், மே-26 – பல்பொருள் அங்காடி கடைப் பணியாளர்கள் இருவருக்கு காயம் விளைவித்தது மற்றும் மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட உணவகப் பணியாளருக்கு, ஜொகூர் பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

27 வயது Muhammad Latiff Daud Osman எனும் அவ்வாடவர், சமூக ஊடகக் கணக்கில் தன்னை block செய்ததற்காக 24 வயது பெண்ணின் கையை முறுக்கியது உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

மே 20-ஆம் தேதி, Taman Orchid Height-சில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதே நாளில் அதே இடத்தில் வைத்து 21 வயது பெண்ணை மிரட்டியதாக இரண்டாவது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

சமூக ஊடகத்தில் தன்னை நண்பராக இணைத்துக் கொள்ள மறுத்து, block செய்து விட்டதால் கோபத்தில் அப்பெண்ணின் வேலையிடத்திற்குச் சென்று அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அப்பெண்ணின் கையை முறுக்கியதாகவும், உதவிக்கு வந்தத் தோழியை வெட்டப் போவதாக மிரட்டியதாகவும் அந்நபர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அதில் கையில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வேளை, தோழி மிரட்டப்பட்டதில் மன உளைச்சலுக்கு ஆளானார்.

முதல் குற்றத்திற்கு 3,000 ரிங்கிட்டும் இரண்டாவது குற்றத்திற்கு 1,800 ரிங்கிட்டும் என மொத்தமாக 4,800 ரிங்கிட் அபராதம் விதித்த நீதிபதி, தவறினால் 7 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!