
சவூதி அரேபியா, அக்டோபர் 21 – சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டம்மாம் (Dammam) நகரில் அமைந்துள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் (King Fahd International Airport) நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
தாக்குதலால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். இருப்பினும், தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலில் (Shaybah Oil Field) குறிவைக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்தனர். அதன் சிதைவுகள் விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர். இதனால் ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றிலும் தீப்பற்றியது. எனினும், எண்ணெய் வயலின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை.
யேமனில் உள்ள ஹூத்தி குழுவினருக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.



