Latestஉலகம்

‘சாப்பிட்டுவிட்டுப் பணம் தராமல் ஓட்டமா?’ மலேசியப் பயணிகளிடம் ஜகார்த்தா உணவகம் மன்னிப்புக் கோரியது

ஜகார்த்தா, மே-20-இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, மலேசிய சுற்றுப்பயணிகள் சிலர் பணம் செலுத்தாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றதாக தவறாகக் குற்றம் சாட்டிய விவகாரத்தில், தற்போது அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளது.

ஜகார்த்தாவில் புகழ்பெற்ற Pagi Sore பாடாங் உணவகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மே 13-ஆம் தேதி, Norain Mohd Yunus தலைமையிலான 6 மலேசியப் பயணிகள் அந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, 9 லட்சம் ரூப்பியா அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 203 ரிங்கிட்டுக்கான உணவுக் கட்டணத்தை கடன் பற்று அட்டை மூலம் செலுத்தியுள்ளனர்.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அந்த உணவக நிர்வாகம் இவர்களின் CCTV காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு, அவர்கள் பணம் செலுத்தாமல் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த மலேசியப் பயணிகள் தங்களிடம் இருந்த அசல் இரசீது மற்றும் வங்கிப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்தைக் காட்டி தங்களின் நேர்மையை நிரூபித்துள்ளனர்.

உணவகத்தின் உள்நாட்டு கணினிப் பதிவில் ஏற்பட்ட தவறே இதற்குக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, உணவக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ மூலமாகவும் அந்த மலேசியப் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அந்தப் பயணிகள், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, பணம் செலுத்தியதற்கான டிஜிட்டல் மற்றும் அசல் இரசீதுகளை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மற்றப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!