Latestமலேசியா

சிரிப்பு உடலுக்கு நல்லது: தேசிய சிரிப்புப் போட்டியில் வாகை சூடிய பெண் வர்த்தகர்

ஜொகூர் பாரு, மே-28- கோழியைப் போல் கூவியும், தனக்குத் தானே கூசிக் கொண்டும் சிரிப்பை வரவழைத்த ஜெ.ஜெயமலர் என்பவர், இணையம் வாயிலாக நடத்தப்பட்ட 2024 மலேசிய சிரிப்புப் போட்டியின் சாம்பியனாகியுள்ளார்.

பேராக், ஈப்போவைச் சேர்ந்த வர்த்தகரான 66 வயது ஜெயமலர், நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற 7 போட்டியாளர்களைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

சிரிப்பு உடல் நலத்துக்கு நல்லது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 3 சுற்றுகளைக் கொண்ட அந்த வித்தியாசமான போட்டியை Johor Bahru Happy and Joyous Club ஏற்பாடு செய்திருந்தது.

அதில் வெற்றிப் பெற்றிருப்பதன் மூலம், வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கும் உலக சிரிப்புப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து அவர் பங்கேற்கவுள்ளார்.

ஒரு பொழுதுப் போக்கிற்காகவும், ஒத்த சிந்தனையுடையவர்களுடன் பழகுவதற்கும், மற்றவர்களின் சிரிப்பை ரசிப்பதற்குமே அப்போட்டியில் தாம் பங்கேற்றதாக கூறும் ஜெயமலர், தான் வெற்றிப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

‘என் பெயர் அழைக்கப்பட்ட போது எனக்கு இரண்டாவது பரிசு தான் என நான் நினைத்தேன்’ என்றார் அவர்.

சிரிப்புப் போட்டியில் பங்கெடுப்பது இது தான் முதல் அனுபவம் என்றாலும், சிரிப்புப் பயிற்சி ஒன்றும் தனக்கு புதிதல்ல என்கிறார் ஜெயமலர்.

தினமும் காலையில் குறைந்தது 5 நிமிடங்களுக்காவது சிரிப்புப் பயிற்சியையும், கோணங்கித் தனமாக எதைவாது பேசுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படிச் செய்வது தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகக் கூறும் ஜெயமலர், உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவும் உதவுவதாக கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!