டாக்கா, டிசம்பர்-6, வங்காளதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு, இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus), மதத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தகவல்கள் பாதுகாப்பாகப் பெறப்படுவதை உறுதிச் செய்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தலைநகர் டாக்காவில் சிறுபான்மை மதத் தலைவர்களுடன் நடத்தியக் கலந்துரையாடலின் போது, யூனுஸ் அவ்வாறு சொன்னார்.
தகவல் கொடுப்பவர்களுக்கு சிக்கல் வராத வகையில், அவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படுமென அவர் உத்தரவாதம் வழங்கினார்.
மதங்களால் வேறுபட்டிருக்கலாம், அதற்காக நாம் எதிரிகள் அல்லர் என்றார் அவர்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உள்நாட்டிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன; ஆனால், அவை சித்தரிப்பது போல் நிலைமை ஒன்றும் மோசமில்லை.
இருந்தாலும், சிறுபான்மையினர் நலன்களை உட்படுத்தியிருப்பதால், அவ்விவகாரத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்துகொண்டே ஆக வேண்டும் என யூனுஸ் சொன்னார்.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதர் பதவியைத் துறந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டே ஓடியதிலிருந்து, சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், சேதப்படுத்துதல், தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் கூட இந்து மத குருக்கள் அடுத்தடுத்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.