
சீனா, செப்டம்பர் 29 – சீனாவின் தென்பகுதியில், கட்டிடத்தில் வேலை செய்த தொழிலாளியின் பாதுகாப்புக் கயிற்றை 70 வயது மூதாட்டி ஒருவர் துணி காயப்போடுவதற்காக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி, 30ஆவது மாடியில் தொழிலாளர் ஒருவர் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் 2ஆவது மாடிக்கு வந்தபோது, அவரது பாதுகாப்புக் கயிற்றின் 10 மீட்டருக்கும் அதிகமான பகுதி வெட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.
120 மீட்டர் நீளமுள்ள அந்தக் கயிறு, தொழிலாளர் பாதுகாப்பாக கீழே இறங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கயிறு வெட்டப்பட்ட நேரத்தில் அதை யாரும் பயன்படுத்தவில்லை.
விசாரணையில், 2ஆவது மாடியில் வசிக்கும் ஒருவர் கயிற்றை வெட்டியது தெரியவந்தது. அது பாதுகாப்புக் கயிறு என்பது தெரியாது என்றும், துணி காயப்போடுவதற்காக வெட்டியதாகவும் அவர் கூறினார்.
கயிறு சேதமடைந்ததற்காக தொழிலாளர் 400 யுவான் இழப்பீடு கேட்டுள்ளார். இந்த சம்பவம் சீன சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.



