Latestமலேசியா

சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தது ஜாலோர் கெமிலாங் புக் ஒப் ரெக்கோர்ட்ஸ்

லுக்குட், நவம்பர் 28 – நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், லுக்குட்டிலுள்ள, சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு, “ஜாலோர் கெமிலாங் புக் ஒப் ரெக்கோர்ட்ஸ்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

100 மீட்டர் பதாகையில், மலேசியாவின் சரித்திர சுவடுகள், பிரதமர்கள், நாட்டின் புகழ்பெற்ற சின்னங்கள் ஆகியவற்றை “மலேசியா மடானி” எனும் சொற்றொடரைக் கொண்டு வரைந்ததால் சுங்கை சாலாக் தமிழ்ப் பள்ளிக்கு அந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார் வெள்ளைசாமி தெரிவித்தார்.

ஓர் இடத்தில் கூட நேர்கோடுகளோ, வளைவு கோடுகளோ பயன்படுத்தப்படாதது அந்த படைப்பின் தனித்துவம் ஆகும்.

சுங்கை சாலாக் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக மேலாளர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர்கள் என 217 பேர் ஒன்றிணைந்து அந்த படைப்பை உருவாக்கியுள்ளனர்.

“மலேசியா மடானி” எனும் சொற்றொடரை, தமிழ், சீன, மலாய் என மும்மொழிகளில், சுமார் 19 ஆயிரத்து 763 முறை எழுதி அவர்கள் அந்த சாதனையை புரிந்துள்ளனர்.

அவர்களின் அந்த தனித்துவமான முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், சில்வெர்மென் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தினர், “ஜாலோர் கெமிலாங் புக் ஒப் ரெக்கோர்ட்ஸ்” எனும் விருதை வழங்கி கெளரவித்தனர்.

தமது பணிக்காலத்தில் தமக்கு கிடைத்த உயரிய விருது அதுவென குறிப்பிட்ட சிவக்குமார், தமது சிந்தனையில் உதித்த அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்த தமது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வரும் காலங்களில் இதே போல தொடர்ந்து பல சாதனைகளை படைக்கவும் அவர் உறுதிப்பூண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!