Latestஉலகம்

செங்கடலில் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குதல்; பொருட்கள் விநியோகம் தடைப்பட்டு, விலைகள் உயரும் அபாயம்

இங்கிலாந்து, டிசம்பர் 23 – அண்மைய சில நாட்களாக, செங்கடலில் சர்வதேச சரக்கு கப்பல்களை குறி வைத்து, ஏமனின், ஹைத்தி (Houthi) கிளர்ச்சிக்காரர்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதனால், உலகின் மிகப் பெரிய கொள்கலன் நிறுவனமான மார்ஸ்க் (Maersk) மற்றும் எரிசக்தி நிறுவனமான BP உட்பட நாற்பதுக்கும் அதிகமான உலகளாவிய கப்பல் பெருநிறுவனங்கள், செங்கடலுக்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

அவற்றில் பல, எகிப்து வழியாக, Mediterranean மத்திய தரைக் கடல் பகுதியை செங்கடலுடன் இணைக்கும் செயற்கை நீர்வழியான சூயஸ் கால்வாயை விடுத்து, தங்கள் இலக்கை அடைய வெகு தூரம் வரை பயணிப்பதாக கூறப்படுகிறது.

1869-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய், உலகின் பரபரப்பான கடல்வழி பாதைகளில் ஒன்றாகும். உலகின் மொத்த வர்த்தக நடவடிக்கைகளில், 12 விழுக்காடு அந்த கால்வாய் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது.

சூயஸ் கால்வாயை பயன்படுத்தும் கப்பல்கள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதால், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

2021-ஆம் ஆண்டு, எவர் கிவன் (Ever Given) எனும் கொள்கலன் கப்பல், ஆறு நாட்கள் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட போது, வாரக்கணக்கில் கப்பல் பயணங்கள் பாதிக்கப்பட்டந. அது உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, கோடிக்கணக்கான வர்த்தக ஓட்டத்தையும் சீர்குலையச் செய்தது.

தற்போது, ஹைத்தி கிளச்சிக்காரர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், மீண்டும் அதே போன்றதொரு சூழல் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.

தாக்குதலுக்கு அஞ்சி, சூயஸ் கால்வாயை விடுத்து மாற்று வழியை பயன்படுத்தும் கப்பல்கள் இலக்கை சென்றடைய வாரங்கள் அல்லது சில சமயங்களில் மாதங்கள் வரை பயணிக்க நேரிட்டால், அது விநியோகச் சங்கிலியை பாதிக்கும் எனவும், அதனால் பொருட்களின் விலை பன்மடங்காக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!