
ஷா அலாம், ஏப்-30-செத்தியா அலாம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருமணப் புகைப்பட நிகழ்வின்போது அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து பொது அமைதியைக் குலைத்த ஒரு குழுவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
செத்தியா அலாம் Community Trail-லில் வாகன நிறுத்துமிடத்தில், தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ராம்சே எம்போல் (Ramsay Embol ) தெரிவித்தார்.
வைரலான அந்தக் காணொளி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இன்று காலை மணி 8.26க்கு போலீசிற்கு இதுகுறித்து புகார் வந்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 1.05 மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையின்போது சுமார் 50 முதல் 100 பட்டாசுகள் தொடர்ச்சியாக மூன்று சுற்றுகளாக வெடிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்த நாள் அதிகாலை மணி 2.11 அளவில் இதே நடவடிக்கை மீண்டும் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையில் ராம்சே எம்போல் தெரிவித்தார்.



