
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 — தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மேற்கொண்டு வரும் விசாரணை அடிப்படையும் ஆதாரமும் அற்றது எனக் கூறி, அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மனிதவள அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் எந்த விவகாரத்திலும் தாமோ தமது குடும்பத்தினரோ நேரடியாக ஈடுபட்டதில்லை என்று சரவணன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அதிகாரம் மனிதவள அமைச்சரிடம் இல்லை என்பதற்கு 2022 ஏப்ரல் 13-ஆம் தேதியிட்ட அமைச்சரவைக் கூட்டக் குறிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் FWCMS எனப்படும் Foreign Workers Centralised Management System வழியாகவே பரிசீலிக்கப்பட்டதாகவும், தகுதியான நிறுவனங்களை அந்த அமைப்பே தானியங்கி முறையில் தேர்வு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதனால் எந்த நிறுவனங்கள் விண்ணப்பித்தன அல்லது நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டன என்பது குறித்து மனிதவள அமைச்சர் என்ற முறையில் தமக்கு முன்கூட்டியே தெரிய வாய்ப்பில்லை என்றும் சரவணன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சையட் அமிருல் மற்றும் சிவா கணேசன் ஆகிய இரு வணிகர்களின் சம்பவங்களையும் சரவணன் தனது கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
சரவணனின் கூற்றுப்படி, சையட் அமிருலிடம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான ‘C’ உரிமம் இல்லை. அதேவேளை, அந்த உரிமத்தைக் கொண்டிருந்த சிவா கணேசன் கடுமையான உடல்நலப் பிரச்சினையால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது பெயரைத் தொடர்புபடுத்தி வாக்குமூலம் வழங்குமாறு இருவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சரவணன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, சையட் அமிருலின் மனைவியையும் கைது செய்வதாக மிரட்டப்பட்ட பின்னரே, அவர் சரவணனின் பெயரைத் தொடர்புபடுத்தும் வாக்குமூலத்தை அளித்ததாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் சையட் அமிருலும் அவரது மனைவியும் தங்களது முந்தைய வாக்குமூலங்களை மறுத்து, 2022 செப்டம்பர் 22-ஆம் தேதி சத்தியப் பிரமாணங்களைச் செய்ததாக சரவணன் தெரிவித்துள்ளார். அந்த ஆவணங்கள் MACC-க்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதையடுத்து 2023 ஜூனில் அவர்களது பிணைத்தொகை திருப்பித் தரப்பட்டதுடன், அப்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், 2025 நவம்பரில் சையட் அமிருலும் அவரது மனைவியும் மீண்டும் இதே விவகாரம் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டதாகவும், அப்போது அவர்கள் தங்களது முந்தைய சத்தியப் பிரமாணங்களில் தெரிவித்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சையட் அமிருல் 2026 ஜூலை 28-ஆம் தேதி உயிரிழந்ததாக சரவணன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவரது மரணத்துக்குப் பின்னரும் தமக்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை MACC தொடர முயல்வது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2025 நவம்பர் முதல் அண்மைக்காலம் வரை இந்த விவகாரம் குறித்து பிரதமர் அன்வாருடன் பலமுறை பேசியதாகவும், தமக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என பிரதமர் உறுதியளித்திருந்ததாகவும் சரவணன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது விசாரணை மீண்டும் முன்னெடுக்கப்படுவது குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தம்முடன் தொடர்புடைய பணமோ முக்கிய ஆதாரங்களோ இதுவரை கைப்பற்றப்படவில்லை என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்க எந்த அரசாங்க அதிகாரிக்கும் தாம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் சரவணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், வரைவு குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களையோ சையட் அமிருலையோ தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தமக்கு எதிரான விசாரணை முற்றிலும் அடிப்படையற்றது என்ற தனது நிலைப்பாட்டை முன்வைத்த சரவணன், சம்பந்தப்பட்ட அனைவரின் நலனையும் நேர்மையையும் பாதுகாக்கும் வகையில் இந்த விசாரணையை உடனடியாக நிறுத்துவதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.



