
கோலாலம்பூர், செப்டம்பர்-23,செராஸ், பண்டார் டாமாய் பெர்டானாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள குடியிருப்பாளர்கள் இரவோடு இரவாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
நிலத்தடி நீர் குழாய் உடைந்ததே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இரவு 9 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பண்டார் துன் ஹுசேய்ன் ஓன் நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடம் விரைந்தனர்.
சுமார் 4 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட சரிவில் மண் சரிவு ஏற்பட்டது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சரிவுக்கு மிக அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
மேலும் நிலச்சரிவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையுடன் இணைந்து மண்ணின் உறுதித்தன்மையை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.



