Latestமலேசியா

சோங் வேயின் பெயரை பயன்படுத்தி மலேசியர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் ; நம்ப வேண்டாம் என நினைவுறுத்தல்

கோலாலம்பூர், ஜூன் 10 – லீ சோங் வெய் (Lee Chong Wei) கூட மோசடி கும்பல்களால் குறி வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், அந்த உலகின் முன்னாள் முதல் நிலை ஆட்டக்காரர், முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும், “டீப்- பேக்” (deep fake) வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

அதனை இன்று வெளிப்படுத்திய சோங் வெய், நாட்டின் பூப்பந்து வீரர் லாய் பெய் ஜிங் (Lai Pei Jing), போலி முதலீட்டு திட்டம் ஒன்றை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த சம்பவத்தை தொடர்ந்து, மோசடி கும்பல்களை எதிர்க்கும் போராட்டத்தில், தாமும் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மலேசியர்கள் எப்பொழுதும் கூடுதல் விழிப்போடு இருக்க வேண்டுமெனவும், ஒரு பொருளோ, சேவையோ அளவுக்கு அதிகமாக நன்றாக அல்லது கவரும் வகையில் இருப்பது போல தோன்றினால், அது பெரும்பாலும் மோசடியாகவே இருக்கும் என்பதையும் சோங் வெய் நினைவுறுத்தியுள்ளார்.

தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர், உலகெங்கிலும் உள்ள மோசடி கும்பல்களால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தையும் சோங் வெய் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமது மனைவி கூட, “மாகாவ்” (Macau) மோசடி கும்பலால் ஒரு முறை ஏமாற்றப்படுவதில் இருந்து அதிஷ்டவசமாக மீண்டு வந்ததையும் சோங் வேய் நினைவுக்கூர்ந்தார்.

குறிப்பாக, முதலீட்டு திட்டங்களின் போஸ்டர்கள் அல்லது விளம்பரங்களில் தமது முகத்தை காண நேர்ந்தால், உடனடியாக தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் அதனை சரிபார்த்துக்கொள்ளுமாறும் சோங் வேய் அறிவுறுத்தினார்.

AI – செயற்கை நுண்ணறிவு வருகையால், மோசடி நடவடிக்கைகளை அடையாளம் காண்பதும், முறியடிப்பதும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதனால், அதுபோன்ற தீங்கினை எதிர்த்துப் போராட, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையுடன் தாம் ஒத்துழைத்து வருவதாக, ஒலிம்பிக்கில் மும்முறை வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சோங் வேய் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!