Latestஉலகம்

ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய்; அமெரிக்க பெண்ணுக்கு RM1.2 பில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன், ஜூன் 4 – ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த டால்கம் பவுடரை நுகர்ந்ததால், மீசோதெலியோமா புற்றுநோய்க்கு இலக்கானதாக கூறியுள்ள, அமெரிக்கா, ஓரிகானை சேர்ந்த பெண் ஒருவருக்கு, 26 கோடி அமெரிக்க டாலர் அல்லது 120 கோடி ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், அந்த தீர்ப்பு, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் பாதுகாப்பானது, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய இராசயனம் எதையும் அது உள்ளடக்கி இருக்கவில்லை என்பதை கடந்த பல ஆண்டுகளாக உறுதிச் செய்து வரும் அறிவியல் மதிப்பீடுகளுடன் முரண்பட்டிருப்பதாக, அந்நிறுவனத்தின் உலகளாவிய நடவடிக்கை துணைத் தலைவர் எரிக் ஹாஸ் கூறியுள்ளார்.

அதனால், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும், நேர்மறையான பலன் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் ஹால் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அந்த வழக்கை தொடுத்த கியுங் லீ எனும் பெண், 2023-ஆம் ஆண்டு, 48-வது வயதில் தாம் மீசோதெலியோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

மீசோதெலியோமா என்பது நுரையீரலின் வெளிப்புற செல்கள் அல்லது வயிற்று செல்களை பாதிக்கக்கூடிய ஒருவகை அரிய புற்றுநோய் ஆகும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தை பருவத்தில் இருந்து, “அஸ்பெஸ்டாஸ்” இரசாயனம் கலந்த பவுடரை நுகர்ந்து வந்ததால், தாம் அந்த புற்றுநோயிக்கு இலக்கானதாக லீ குறிப்பிட்டுள்ளார்.

அந்த குற்றச்சாட்டை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வரும் போதும், தனது தயாரிப்பிலான பவுடர்கள் தொடர்பில், 61 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளை அது எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!