ஜெர்மனி, ஏப்ரல் 4 – ஜெரிமனியில், உயிரியல் பூங்கா ஒன்றிலிருந்து குரங்கு ஒன்றை திருடிச் சென்றுள்ளார்கள் மர்ம நபர்கள் சிலர்.
ஈஸ்டர் தினத்தன்று, ஜெர்மனியின் Leipzig நகரிலுள்ள உயரியல் பூங்கா பணியாளர்கள், விலங்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அரிய வகை சிங்க வால் குரங்கு ஒன்றைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, உயிரியல் பூங்காவுக்குள் மர்ம நபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதும், அவர்கள் அந்தக் குரங்கை பொறிவைத்துப் பிடித்துள்ளதும் தெரியவந்தது.
அழிவின் விளிம்பிலிருக்கும் விலங்கு வகைகளின் ஒன்றான அந்த பெண் சிங்க வால் குரங்குக்கு Ruma என்று பெயரிடப்பட்டு, 15 வயதாகிறதாம்.
அதே உயிரியல் பூங்காவில் ஒரு 12 வயதுடைய Yenur என்னும் ஆண் சிங்க வால் குரங்கும் உள்ளது. அதைப் பிடிக்க யாரும் முயற்சி செய்ததுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், இந்த வகை குரங்குகள் சேர்ந்து வாழும் குணம் கொண்டவை என்பதால், தன் துணையைப் பிரிந்து Yenur கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
எனினும், இத்தகைய குரங்குகளை வீடுகளில் வளர்ப்பது கடினம். அப்படியிருக்கும்போது, அந்த திருடர்கள் எதற்காக அதைத் திருடிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.