Latestமலேசியா

ஜோகூரில் நம் செங் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே கல்வி பயில்கின்றனர்

ஜோகூர் பாரு, ஜூன் 8 – பிரதான மின் விநியோக பெட்டியில் ஏற்பட்ட கோளாறினால் கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள Ladang Nam Heng தமிழ் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 39 மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நடைபாதை பகுதியில் அமர்ந்து படிக்க வேண்டிய சிரமத்திற்கு உள்ளாகினர். இப்போதைய வறட்சியினால் மாணவர்களில் சிலர் குமட்டல் மற்றும் தலைசுற்றல் பிரச்சனைக்கு உள்ளானதால் வீட்டிலேயே இருந்து படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்பள்ளியில் மின்சாரக் கோளாறு பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும் இம்முறை தொடர்ந்து நான்கு முறை மின்சார கோளாறு ஏற்பட்டதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான S. பிரியலதா ( Priyalatha ) ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளியில் ஒரு புளோக்கிலுள்ள வகுப்பறைகள் மட்டுமே போதுமான மின்சார விநியோகத்திற்கான கொள்ளளவை கொண்டுள்ளது. பல ஆண்டு காலமாக மின் இணைப்பு மாற்றப்படவில்லை. இரண்டுக்கும் மேற்பட்ட புளோக்குகள் நிர்மாணிக்கப்பட்டது மற்றும் இதர வசதிகளினால் தற்போது மின் கோளறு பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மின் கசிவு ஏற்படும்போது குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மின்சார விநியோகத்தில் பிரச்னை ஏற்படுவதால் ஒவ்வொரு முறையும் மின் தொழிற்நுட்பாளர் ஒருவர் சரி செய்ய வேண்டியுள்ளது. எனினும் செவ்வாய்க்கிழமையன்று பிராதான சுவிட்ச் பெட்டியில் ஏற்பட்ட பாதிப்பினால் ஒட்டுமொத்தமாகவே மின்சார விநியோகம் செயல் இழந்ததாக அவர் கூறினார். அதிக வெப்பமாக இருப்பதால் வகுப்புக்குள் உட்கார்ந்து பயில்வது மிகவும் சிரமமாக இருந்ததால் வகுப்பறைக்கு வெளியே நடைபாதையில் மாணவர்கள் அமர்ந்து படித்ததை காண்பது மிகவும் கவலையாக இருந்ததாக பிரியலதா தெரிவித்தார்.

பலமுறை இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வித்துறை, பொதுப்பணித்துறை , தெனாகா நேசனல் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த தொழிற்நுட்பாளர் மின் விநியோகப் பெட்டியில் Fuse மாற்றியதால் தற்காலிகமாக மின் விநியோகம் கிடைத்தது. எனினும் இது தற்காலிகமான ஏற்பாடுதான். கடந்த ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் 6,000 ரிங்கிட் செலவு செய்து பழுதுபார்க்கும் வேலைகளை செய்தபோதிலும் அந்த பிரச்சனைக்கு முழுயாக தீர்வு காண முடியவில்லை. எவராவது மின் விநியோக பிரச்சனைக்கு தீர்வு கண்டால்தான் மாணவர்கள் பொருத்தமான சூழ்நிலையில் பயில்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு நீண்ட கால அடிப்படையிலான தீர்வு தேவை . ஒட்டு மொத்தமாகவே பள்ளியின் மின் இணைப்பை புதிதாக மாற்ற வேண்டும். இதற்கு பெரிய அளவில் ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் பிரியலதா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!