
கூலாய், ஜூன்-14 – கடந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் புக்கிட் பத்து தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா வேட்பாளர் 137 சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட நிலையில், இம்முறை அங்கு ம.இ.கா நிச்சயம் வெற்றிப் பெற்றாக வேண்டும்.
அதற்காக கட்சித் தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
புக்கிட் பத்து தொகுதியில் ம.இ.கா தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது விக்னேஸ்வரன் அவ்வாறுக் கூறினார்.
ஜூலை 11 சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும், அவரை முழுமையாக ஆதரித்து வெற்றிப் பெற வைப்பது ம.இ.காவினரின் கடமை என்றார் அவர்.
இவ்வேளையில், இதே நிகழ்வில் பேசிய மாநில ம.இ.கா தலைவரும் ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி, ம.இ.கா மூலமாக இந்தியப் பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை புக்கிட் பத்து தொகுதி மக்கள் வீணாக்கி விடக் கூடாது என்றார்.
கடந்த 4 ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சியில் மாநில இந்தியர்களும் தொகுதி மக்களும் அடைந்த நன்மைகளையும் ரவின் பட்டியலிட்டார்.
தொகுதி மட்டத்தில் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, புக்கிட் பத்துவை மீண்டும் கைப்பற்றும் வேட்கையோடு நிறைவடைந்தது.
வரும் 16-ஆவது ஜோகூர் தேர்தலில் அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்தே போட்டியிடும் நிலையில், புக்கிட் பத்து உள்ளிட்ட 4 தொகுதிகள் ம.இ.காவுக்கு ஒதுக்கப்படும் என நம்பப்படுகிறது.



