
கோலாலாம்பூர், ஜூலை-12 – ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி சார்பில் களமிறங்கிய ம.இ.காவின் 4 வேட்பாளர்களும் வெற்றிப் பெற்றிருப்பது, கடந்த கால அதிருப்திகளை மறந்து ஒரு வாய்ப்பை இந்தியச் சமூகம் வழங்கியிருப்பதாகவும் அதனை நல்ல முறையில் ம.இ.கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
மீட்டெடுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ம.இ.கா தொடர்ந்து இந்தியச் சமூகத்துக்கு குரல் கொடுக்கக் கூடிய கட்சி என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். அதனை அங்கீகரிக்கும் வகையில் தான் ஜோகூர் வாக்காளர்கள் இந்த முதுபெரும் கட்சிக்கு 100 விழுக்காட்டு வெற்றியைத் தந்துள்ளனர் என்றார் அவர்.
குறிப்பாக பெர்லிங் சட்டமன்றத்தில் ம.இ.காவின் பன்னீர் செல்வம் வெற்றிப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியதை விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
பன்னீர் செல்வம் ஊராட்சி மன்ற உறுப்பினராக கொண்டிருந்த அனுபவமும் வெற்றிக்கு கைகொடுத்ததாக அவர் கூறினார். புக்கிட் பத்துவின் குமரன் ராமகிருஷ்ணனும் மக்கள் பணியில் அனுபவசாலி என்றார் அவர்.
ஏனைய 2 தொகுதிகளான கெமளா, மற்றும் கஹாங்கில் முறையே ரவின் குமார் கிருஷ்ணசாமி மற்றும் ருகேந்திரன் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இவ்வெற்றி கட்சிக்குப் புது தெம்பைத் தந்திருக்கும் அதே வேளை, இது தங்களுக்கு கூடுதல் பொறுப்பு எனவும் விக்னேஸ்வரன் கூறினார்.
வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் மலாய்க்காரர்கள் பெரும்பான்பையாக உள்ளனர். அடுத்த இரு தொகுதிகளில் கணிசமான அளவு சீனர்களும் இந்தியர்களும் உள்ளனர். இது தாங்கள் முறையாக சேவையாற்ற வேண்டிய சவாலையும் கொண்டு வருவதாக கூறினார்.
ஆகையால் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, அனைவரின் ஆதரவையும் பெற ம.இ.கா சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியினரும் தொடர்ந்து முழுமூச்சுடன் மக்கள் சேவையில் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.
கடந்த 2022 தேர்தலில் ம.இ.கா 4 இடங்களில் மூன்றில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



