ஜோகூர் பாரு, ஏப்ரல் 26 – ஜோகூர் பாருவிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், ஆறாவது மாடியிலிருந்து, சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
இரு நாட்களுக்கு முன், மாலை மணி 6.30 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
தனது மூத்த 11 வயது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர தாய் சென்றிருந்த போது, அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னுடன், பிறந்து நான்கு மாதங்களே ஆன தனது மூன்றாவது மகளை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிமிறு, துயில் களைந்து எழுந்து, பூட்டப்படாமல் இருந்த வீட்டின் “பால்கனி” கதவை திறந்து, மதில் சுவர் மேல் ஏறி, 12-வது மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அச்சிறுமி உயிரிழந்ததை, ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட 32 வயது பெண், பின்னர் போலீஸ் உத்தரவாத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை புறக்கணித்தது அல்லது அலட்சியம் செய்த குற்றங்கள் தொடர்பில், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.