
நியூ யார்க் , ஜூன்-19 – நியூ யார்க், டைம்ஸ் ஸ்குவேரில் (Times Square) 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் ரசிகர்கள் உற்சாகமாகக் கூடியிருந்த சூழலின்போது அப்பகுதியில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டதோடு, இது கூட்டத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை நியூயார்க் போலீஸ்துறை உறுதிப்படுத்தியது.
அந்த சம்பவத்தின்போது உயிருக்குப் பயந்து பார்வையாளர்கள் சிதறி ஓடியதால் அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் காற்பந்து ரசிகர்களால் அப்பகுதி நிரம்பியிருந்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் விரைந்து வருவதை உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் வான்வழிப் படங்கள் காட்டின.
முன்னதாக, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் மொராக்கோ உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் Times Square ரை உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான சந்திப்பு மற்றும் கொண்டாட்ட மையமாக மாற்றியிருந்தனர்.
நோர்வே காற்பந்து விளையாட்டாளர் எர்லிங் ஹாலண்ட் ( Erling Haaland) உட்பட பல கால்பந்து நட்சத்திரங்களும் அப்பகுதிக்கு வந்து சென்றுள்ளனர்.
ஹாலண்ட் தனது வருகையின் தருணங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.
Times Square ரில் கான்சாஸில் உள்ள இங்கிலாந்து அணி தங்கியிருந்த விடுதிக்கு அருகே மற்றொரு பாதுகாப்பு நெருக்கடி நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுவரை உலகக் கிண்ண காற்பந்து போட்டி பெரிய இடையூறுகள் எதுவுமின்றி , நடைபெற்று வந்தாலும், இச்சம்பவம் போட்டியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.



