Latestஇந்தியாஉலகம்

தனிப்பெரும்பான்மை இல்லை; இருந்தாலும் மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறுவது வரலாற்றுச் சாதனையே – மோடி பெருமிதம்

புது டெல்லி, ஜூன்-5 – இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி NDA வாகை சூடியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர வைத்து, BJP மற்றும் NDA கூட்டணி மீதான அபரிமித நம்பிக்கையை கோடான கோடி வாக்காளர்கள் புலப்படுத்தியிருப்பதாக மோடி வருணித்தார்.

இந்த வெற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றார் அவர்.

வெற்றிப் பெற்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்பதில் வருத்தமே என்றாலும், மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதே வரலாற்றுச் சாதனை தான் என, தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டார்.

இந்திய மக்கள் BJP மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற நல்லாட்சி தொடரும் என அவர் உறுதியளித்தார்.

73 வயது நரேந்திர மோடி, 2014-ல் முதன் முறையாக பிரதமரானார்.

2019-ல் மேலும் அசுர பலத்தோடு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மோடி, இம்முறை 400-க்கும் குறையாத தொகுதிகளில் அமோக வெற்றிப் பெறுவோம் எனக் கூறியிருந்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணி கடும் போட்டியைக் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், BJP-யால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையென்ற நிலையில், BJP 241 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

எனவே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தான் மோடியின் மூன்றாவது அரசாங்கம் பதவிக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

பிரதமர் பதவிக்கு மோடியுடன் மோதி மூன்றாவது முறையாகத் தோல்வி கண்டாலும், முந்தைய 2 தேர்தல்களை விட ராகுல் காந்தி இம்முறை கடும் போட்டியைக் கொடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க தமிழகத்தின் அனைத்து 39 தொகுதிகளையும் வாகை சூடி வரலாறு படைத்துள்ளது.

தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களவைத் தேர்தலில் 39-க்கு 39 என வெற்றிப் பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!