Latestமலேசியா

தம்புன் தொகுதியிலுள்ள கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 32 லட்சம் ரிங்கிட் செலவில் இணைக்கட்டிடம்! மார்ச் மாதம் அடிக்கல் நாட்டு விழா!

ஈப்போ, பிப் 6 – பேரா தம்புன்  தொகுதியில் அதிக மாணவர்களைக் கொண்ட  கிளேபாங் தமிழ்ப் பள்ளியில் 32 லட்சம் வெள்ளி செலவில் இணைக் கட்டிடம் எழுப்பப்படவுள்ளது .  

அந்த கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா வரும் மார்ச் மாதம் நடைபெறும்  என்பதோடு அந்த நிகழ்ச்சிக்கு பிரதமரும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  வருகைபுரிவார் என எதிர்பார்க்கப்படுவதாக  அவரின் சிறப்பு அதிகாரி ஆர். சுரேஸ்குமார்   தெரிவித்திருக்கிறார்.  

இப்பள்ளியில் மாணவர்களின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிக்கு இணைக்கட்டிடம் எழுப்ப பள்ளி வாரியக் குழு  நடவடிக்கை எடுத்தது . அதற்கு அப்போதைய கூட்டரசு அரசாங்கம்  12  லட்சம் ரிங்கிட்டை வழங்கியது. 

அந்த இணைக்கட்டிடம் எழுப்ப தேவையான எஞ்சிய  20 லட்சம் ரிங்கிட்டை   டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அங்கீகரித்துள்ளார் என  கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராதரவோடு  நடைப்பெற்ற பொங்கல்   விழாவிற்குப் பின்னர் சுரேஸ்குமார்  செய்தியாளர்களிடம் இதனை  தெரிவித்தார்.

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் 200 பேர் பொங்கல் வைத்து கொண்டாடியதுடன் சிறுவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி , உறியடித்தல் போட்டி  ஆகியவை  நடைபெற்றது.   தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஆண்டு  டத்தோஸ்ரீ் அன்வார் தலைமையில்  பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றதையும் சுரேஸ்குமார் நினைவுகூர்ந்தார்.  

இத்தொகுதியில் உள்ள  இந்தியர்கள்  எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த வகையில் இந்த வட்டாரத்தில உள்ள தமிழ்ப்பள்ளிகள்  , ஆலயங்கள் , வசதி குறைந்த குடும்பங்களின் தேவைகளுக்கு உதவிகள்,  வர்த்தகத் துறையில் ஈடுபடும் நபர்களுக்கும் உதவிகள் மற்றும்  பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மடிக் கணினி ஆகியவைகள் வழங்கப்படுவதாகவும் அவர்  தெரிவித்தார். இந்நாட்டில்   வறுமை நிலையை போக்கவேண்டும் என்பதே பிரதமரின் லட்சியம் . அதன்படி இந்த தொகுதியிலும் வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சுரேஸ்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!