
கோலாலம்பூர், ஆக 31 – இன பிளவுகளை குறைப்பதற்கு சிறந்த வழியாக தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளான தாய்மொழிப் பள்ளகளை கடுமையாக குறைகூறி வந்தவரான மகாதீர் அப்பள்ளிகள் நாட்டை பிளவுபடுத்தியிருப்பதாக மீண்டும் தெரிவித்திருக்கிறார். கல்வியின் மூலமாக அதுவும் தாய்மொழிப் பள்ளிகளை ரத்துச் செய்வதன் வாயிலாக மடடுமே இன ரீதியிலான பிளவுகளை களைவதற்கு சிறந்த வழியாக இருக்க முடியும் என டாக்டர் மகாதீரை மேற்கொள் காட்டி உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில இனங்கள் தங்களது பிள்ளைகளை தேசிய பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அவர்கள் தேசிய பள்ளிகளை சமயப் பள்ளிகளாக கருதுகின்றனர் . தேசிய பள்ளிகளில் நிலைமை மேம்பட்டாலும் சிறுபான்மையின்ர் தங்களது பிள்ளைகளை இன்னமும் அப்பள்ளிகளில் பதிவு செய்வதில்லையென மகாதீர் குறிப்பிட்டுள்ளார். அதோடு வந்தேறிகளாக உள்ள இனங்கள் மலாய்க்கார மாணவர்களோடு இணைந்து கொள்வதை விரும்பவில்லையென மகாதீர் கூறியுள்ளார். அவர்கள் தங்களது தாய்மொழியை தங்களது தாய்நாட்டில் இருப்பதுபோன்று பாதுகாப்பதற்காக பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து பேண விரும்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.