Latestமலேசியா

நகை கடை பணியாளரிடம் ‘ஹைய்’ என லாவகமாக கூறிவிட்டு, RM178,000 நகைகளை கொள்ளையிட்டு கம்பி நீட்டிய ஆடவன் ; போலீஸ் வலைவீச்சு

அலோர் ஸ்டார், டிசம்பர் 4 – துப்பாக்கி மற்றும் கோடாரியுடன், கெடா, அலோர் ஸ்டார், ஜாலான் லங்காரிலுள்ள, நகை கடையில் புகுந்த கொள்ளையன் ஒருவன், ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான நகைகளுடன் கம்பி நீட்டினான்.

கடையில் புகுந்த அவன், அங்கிருந்த பெண் பணியாளரிடம் வழக்கம் போல “ஹைய்” என கூறிய பின்னர், மூன்றே நிமிடங்களில் நகைகளை கொள்ளயிட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.

நேற்று மாலை மணி 5.10 வாக்கில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில், நகைக் கடை உரிமையாளரின் மகனிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததை, கோத்தா ஸ்டார் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சையிட் பஸ்ரி சையிட் அலி உறுதிப்படுத்தினார்.

தனியாளாக நகைக் கடையில் நுழைந்த ஆடவன் ஒருவன், நகைகளை கொள்ளையிட்டு சென்றது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பஸ்ரி சொன்னார்.

சுமார் 170 செண்டிமீட்டர் உயரமும், பருமனான உடல்வாகையும் கொண்டிருந்த அவ்வாடவன், வெள்ளை நிற ஹெல்மட், நீல நிற ஜாக்கெட், கருப்பு நிற கால்சட்டை மற்றும் கறுப்பு நிற காலணிகளை அணிந்திருந்தான். அதோடு அவன் பூப்பந்து பை ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, அந்த நகைக் கடையின் நிர்வாகி என நம்பப்படும் பெண், அவரது மகன் மற்றும் பெண் பணியாளர் ஒருவர் மட்டுமே இருந்தனர்.

கடையில் நுழைந்த கொள்ளையன், பையை தரையில் வைத்து திறந்து, அதில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையிட்டு, Suzuki Raider ரக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!