
நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான Sunway Lagoon மீது மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய நச்சுணவுப் பாதிப்புச் சம்பவமே இதற்குக் காரணமாகும்.
ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், MCMC சார்பில் சுமார் 1.85 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரப்பட்டுள்ளது.
2025 அக்டோபரில் Sunway Lagoon-னில் நடைபெற்ற MCMC குடும்ப தின விழாவின் போது, அங்கிருந்த உணவை உட்கொண்ட ஊழியர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் விசாரணையில், உணவைக் கையாண்டதில் ஏற்பட்ட அலட்சியமே இந்த பாதிப்புக்குக் காரணம் என கண்டறியப்பட்டது.
தற்போது அந்த நிகழ்வுக்காகச் செலுத்தப்பட்ட முழுத் தொகையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும் Sunway Lagoon நிர்வாகம் வழங்க வேண்டும் என MCMC தரப்பில் கோரப்பட்டுள்ளது.
எனினும், தாங்கள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் முறையாகப் பின்பற்றியதாகச் Sunway Lagoon நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
வழக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.



