Latestஉலகம்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் லட்சியத்தில் ரஷ்யா – சீனா கைகோர்ப்பு

மாஸ்கோ, மார்ச் 6 – நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் லட்சியக் கனவுத் திட்டத்தில் ரஷ்யாவும் சீனாவும் கைகோர்த்துள்ளன.

2033 முதல் 2035 வரையிலான காலக்கட்டத்தில் அக்கனவை நிறைவேற்ற அவ்விரு அணு வல்லசுகளும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

அந்த லட்சியத்தை அடைவதன் மூலம்
வருங்காலத்தில் நிலவில் மனித குடியேற்றம் சாத்தியமாகும் என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் யூரி போரிசோவ் சொன்னார்.

அத்திட்டத்தில் இரு நாடுகளும் அணுக்கமாக ஒத்துழைக்கவிருப்பதாகக் கூறிய அவர், திட்டத்தின் வெற்றியை உறுதிச் செய்ய, விண்வெளி அணுசக்தியில் மாஸ்கோ தனக்கிருக்கும் பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து உதவும் என்றார்.

வருங்காலத்தில் நிலவில் மனிதர்கள் குடியேறினால்,
சூரிய சக்தி தகடுகளால் ( Solar Panel) அவர்களுக்குப்
போதுமான மின்சாரத்தை வழங்க முடியாது; ஆனால் அணுசக்திக்கு அந்த திறன் உள்ளது என்று போரிசோவ் கூறினார்.

திட்டத்தின் சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசுகையில் “இது மிகவும் கடுமையான சவால்… இது ஆளில்லாமல் தானியங்கி முறையில் செய்யப்பட வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் சமீப ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்தக் கனவுத் திட்டம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு, ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, 47 ஆண்டுகளில் அதன் முதல் நிலவுப் பயணம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!