Latestமலேசியா

நில மோசடி இழப்பு RM299 மில்லியனை எட்டியுள்ளது ; போலீஸ் தகவல்

கோலாலம்பூர், மே 28 – நாட்டில், 2021-ஆம் ஆண்டு தொடங்கி 2023-ஆம் ஆண்டு வரை, மூன்றாண்டுகளில், மொத்தம் 29 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான இழப்பை உட்படுத்திய 489 நில மோசடி வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம், இவ்வாண்டு, மே 19-ஆம் தேதி வரை மட்டும், ஆறு கோடியே 69 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய 74 நில மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக, புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் தெரிவித்தார்.

அதனால், மோசடி சம்பவங்களை தடுக்க, நில உரிமை மாற்றம் மீதான நடைமுறைகள் மறுஆய்வுச் செய்யப்பட வேண்டும் எனவுன், நடப்பிலுள்ள செயல்முறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் ரம்லி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, நில அலுவலகம் தனது கவனத்துக்கு கொண்டு வரப்படும் நில உரிமை சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை முதலில் முழுமையாக உறுதிச் செய்ய வேண்டும்.

அதனால், நில உரிமை மாற்றம் நடவடிக்கைகள் தாமதமானாலும், பல கோடி ரிங்கிட் மதிப்பிலான மோசடிகள் நிகழாமல் தடுக்க முடியும் என ரம்லி நம்பிக்கை தெரிவித்தார்.

நில விற்பனை குறித்து அறியாத வாடிக்கையாளர்களே, நில மோசடி சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும், நிலத்தை வாங்கும் முன், அவர்கள் அது குறித்து நன்கு அறிந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது இல்லை. அதுவே பெரும்பாலான நில மோசடி சம்பவங்களுக்கு காரணம் என்பதையும் ரம்லி சுட்டிக்காட்டினார்.

அதோடு, போலி நில உரிமம் பத்திரங்களாலும் மோசடிகள் நிகழ்கின்றன.

அதனால், நிலம் வாங்க விரும்பும் பொதுமக்கள் கூடுதல் விழிப்போடு, பத்திரங்களின் நம்பகத்தன்மையை முழுமையாக சரிபார்ப்பதோடு, அது குறித்து நன்கு அறிந்தவர்களின் ஆலோசனையை பெறுமாறு ரம்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!