
கோலாலம்பூர், ஜூலை-1 -வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முகமட் அனைத்து மலாய்க்காரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவர் மலாய்க்காரர் என்றால், அவருக்கே வாக்களிக்க வேண்டும் என மஹாதீர் வலியுறுத்தினார்.
மலாய் வாக்காளர்களின் தேர்வே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். மலேசியா ‘தானா மெலாயு’ என நீடிக்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள் அல்லது அரசு சாரா அமைப்புகள் மீதான விசுவாசத்தைப் பின்தள்ளி மலாய்க்காரர்களுக்கு வாக்களியுங்கள்.
மலாய்க்காரர்களின் விசுவாசம் மலாய்க்காரர்களிடம்தான் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தரப்பிடம் விசுவாசம் செலுத்தினால், ‘தானா மலாயு’ என்ற மலாய் தேசத்தைப் பறிகொடுத்து விட வேண்டி வரும். அதோடு மலாய்க்காரர்கள் என்ற அடையாளத்தை இழந்து நாடற்ற மக்களாகி விடுவார்கள் என மஹாதீர் எச்சரித்தார்.
மலாய்க்காரர்கள் எதிர்நோக்கும் பிளவுகளுக்கும் சவால்களுக்கும் அவர்களே பொறுப்பு. மலாய் கட்சிகள் தற்போது பெருகி அந்தச் சமூகத்தைப் பிளவுபடுத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளதாக அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டினார்.
அம்னோ, பெர்சாத்து, பெஜுவாங் ஆகிய கட்சிகளுக்கு இதற்கு முன் தமைமை வகித்த மஹாதீர், தாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதில் தோல்வியடைந்து விட்டதாகக் கூறிக் கொண்டார்.



