
கோலாலாம்பூர், செப்டம்பர்-5,வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT, நாட்டின் சொத்துத் துறையைச் சீரமைப்பதற்கான சில முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
கோலாலம்பூரில் நேற்றிரவு நடைபெற்ற மலேசியச் சொத்து கண்காட்சி 2026 (MAPEX 2026) தொடக்க விழாவில் உரையாற்றிய போது அமைச்சர் ஙா கோர் மிங் அவற்றை அறிவித்தார்.
அவ்வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைக் கட்டட முறைகளைப் பின்பற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் பரிந்துரை நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, வீடுகளின் மலிவு விலையைத் தீர்மானிக்க அடுத்தாண்டு முதல் ‘Big Data’ முறை அறிமுகப்படுத்தப்படும்.
அதன் கீழ், ஒரே மாதிரியான வழக்கமான அளவுகோலுக்குப் பதிலாக, அந்தந்தப் பகுதி மக்களின் உண்மையான வருமானம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு ஏற்ப வீடுகளின் விலைகள் தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.
இவ்வேளையில், சுயத் தொழில் செய்வோர் மற்றும் கிக் (Gig) ஊழியர்களுக்கு ‘SJKP’ திட்டத்தின் கீழ் கடன் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
தவிர, பாதியில் கைவிடப்படும் வீடமைப்புத் திட்டங்களைத் தடுக்க புதிய சட்டச் சீர்திருத்தங்களும் கொண்டுவரப்படவுள்ளதாக ஙா கோர் மிங் சொன்னார்.



