Latestமலேசியா

பண்டார் உத்தாமா பள்ளி கொலை வழக்கு: மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றம் தீர்ப்பு; பதின்ம வயது மாணவன் விடுவிப்பு

ஷா ஆலாம், செப்-14—கடந்தாண்டு சிலாங்கூர், பண்டார் உத்தாமாவில் உள்ள பள்ளியில் சக மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவரை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. குற்றம் நடந்த போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறி அது அத்தீர்ப்பை வழங்கியது.

எனினும், அம்மாணவரை பேராக் மாநிலத்தில் உள்ள Bahagia Ulu Kinta மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்குமாறும் சிலாங்கூர் சுல்தானின் விருப்பத்திற்கு ஏற்ப அங்கு தொடர்ந்து தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

கொலை நிகழ்ந்த போது, தாம் செய்த செயலின் தன்மையையோ அது சட்டத்திற்கு முரணானது என்பதையோ புரிந்து கொள்ளும் நிலையில் அம்மாணவர் இல்லை என்பதைத் தற்காப்புத் தரப்பு நிரூபித்ததாக அம்மாணவரின் வழக்கறிஞர் Kitson Foong தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.20 மணிக்கும் 9.35 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் பள்ளியின் பெண்கள் கழிவறையில் அம்மாணவர் 16 வயதான மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்பிருந்தது.

இதனிடையே, மனநலப் பரிசோதனைக்குப் பின் கடந்த ஜனவரியில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவர் என அறிவிக்கப்பட்ட சிறுவனின் வழக்கு, சிறார் என்பதால் மூடிய அறையில் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தற்காப்பு வாதம் புதிய உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!