Latestமலேசியா

பத்து காஜாவில் சேவல் சண்டை சூதாட்டச் சோதனை; 41 பேர் கைது, RM114,211 பறிமுதல்

ஈப்போ, அக்டோபர்-4,பேராக், பத்து காஜாவில் செயல்பட்டு வந்த சேவல் சண்டை சூதாட்டக் கும்பலை முறியடித்த போலீஸார், 41 ஆடவர்களைக் கைதுச் செய்தனர்.

பாப்பானில் உள்ள டுரியான் தோட்டம் ஒன்றிலுள்ள குடிசையில், அக்டோபர் 3-ஆம் தேதி இரவு 7 மணியளவில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பேராக் போலீஸின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த D7 மற்றும் D9 பிரிவுகள், பத்து காஜா மாவட்டப் போலீஸ் மற்றும் பேராக் கால்நடை சேவை இலாகாவுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

கைதானவர்களில் 40 பேர் மலேசியர்கள்; ஒருவர் இந்தோனேசியப் பிரஜை என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார்.

அவர்களில் 50 வயது ஆடவர் ஒருவர், தாமே இந்த சூதாட்டத்தின் ஏற்பாட்டாளரும் இடத்தின் உரிமையாளரும் என்பதை ஒப்புக் கொண்டார்.

மேலும் இருவர் சேவல் சண்டையின் நடுவர்களாகவும் ஏற்பாட்டாளரின் உதவியாளர்களாகவும் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

சோதனையின் போது பல்வேறு பொருட்களுடன், சூதாட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 114, 211 ரிங்கிட் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சூதாட்ட நடவடிக்கை இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து நடைபெற்று வந்ததாகவும், ஒவ்வொரு சுற்றிலும் 20 ஆயிரம் ரிங்கிட் வரை பந்தயம் கட்டப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!