Latestமலேசியா

பந்தாய் ரெமிசில் இந்தியர்களுக்கு ஐஸ்கிரிம் விற்கப்பனைக்கில்லையா? சர்ச்சையான காணொளியைத் தொடர்ந்து விற்பனையாளர் மன்னிப்பு

கோலாசிலாங்கூர், பிப் 13 – இந்தியர்களுக்கு ஐஸ்கிரிம் விற்க முடியாது என கோலா சிலாங்கூர் பந்தாய் ரெமிஸிலுள்ள ஐஸ்கிரிம் விற்பனையாளர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து அது சர்ச்சையானது.

சீனப்பெருநாள் விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் பெண் ஒருவர் பந்தாய் ரெமிசிற்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் ஐஸ்கிரிம் கேட்கவே, அருகில் ஐஸ்கிரிம் விற்றுக்கொண்டிருந்த ஆடவரிடம் சென்றபோது இந்தியர்களுக்கு விற்க முடியாது என கூறினார். பின்னர் வேறு வழியின்றி அருகேயிருந்த மலாய்க்காரர் குடும்பத்தினரிடம் பணம் கொடுத்து ஐஸ்கிரிம் வாங்கியதாக தன்னுடைய கசப்பான அனுபவத்தை காஜாங்கிலிருந்து வந்த பிரியங்கா எனும் அப்பெண் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே தம்மிடம் ஐஸ்கிரிம் வாங்கிய இந்தியர்களில் சிலர் பணம் கொடுக்க மறுத்ததோடு மது அருந்திய அவர்கள் தம்மிடம் தகராறு புரிந்தது குறித்து தாம் போலீசிலும் புகார் செய்திருப்பதோடு அதனால் இனி இந்தியர்களுக்கு ஐஸ்கிரிம் விற்பனையை மறுப்பதாக அந்த விற்பனையாளர் கூறுவது எந்த வகையில் நியாயம் என அந்த பெண் தமது காணொளியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து சிலாங்கூர் ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சுந்தரம் உத்தரவில் சிலாங்கூர் ம.இ.கா இளைஞர் பிரிவின் செயலாளர் ஸ்ரீ விஜயகுமார் இந்த சர்சையில் தலையிட்டு தீர்வு கண்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த ஐஸ்கிரிம் விற்பனையாளர் மன்னிப்பு கோரி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த ஐஸ்கிரிம் விற்பனையாளருடன் மது அருந்திய இந்தியர்கள் பிரச்சனை செய்திருப்பது பற்றி உண்மை நிலவரம் தெரியாத நிலையில், அச்சம்பவம் உண்மையில் நிகழ்ந்திருந்தால் அது எப்படி பிற இந்தியர்களை பாதிக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும் என இச்சம்பவம் தொடர்பில் வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலரின் தவறான நடவடிக்கை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே கலங்கத்தை ஏற்படுத்துகின்றது. நாம் சரியாக முதலில் நடந்துக் கொள்கிறோம் என்பதை உறுதிபடுத்திவிட்டு, பின்னர் பிற இனத்தவர் நம்மை முறையில்லாமல் நடத்துவதை பற்றி கொந்தளிப்போம் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

அதே சமயத்தில், எல்லா சமுதாயத்திலும் தவறு செய்பவர் இருக்கவே செய்கின்றனர். அப்படியிருக்க அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் தவறு என வகைப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் வலைத்தளவாசிகள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!