
கோலாலாம்பூர், மே-22 – உயர் கல்வித் துறையில் இந்தியச் சமுதாயத்திற்கான வாய்ப்புகள் மற்றும் கல்விப் பங்களிப்பில் கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என, மலாயா பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகள் சங்கமான CUMIG அரசாங்கத்தை வலியுறுத்தியது.
அவ்வகையில், கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையிலான இந்திய மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை குறித்த விரிவான மற்றும் நீண்டகாலப் புள்ளிவிவர அறிக்கையை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, பொதுப் பல்கலைக்கழகங்கள், மெட்ரிகுலேஷன், பாலிடெக்னிக், மற்றும் TVET தொழிற்கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் ஆண்டுச் சேர்க்கை விகிதம் மற்றும் அரசாங்க கல்வி உபகாரச் சம்பளங்களின் ஒதுக்கீடு ஆகியவை இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என அது கோரியுள்ளது.
துல்லியமான புள்ளிவிவரங்கள் இருந்தால் மட்டுமே சமுதாயத்தின் உண்மையான கல்வி நிலவரத்தையும், அதிலுள்ள கட்டமைப்பு இடைவெளிகளையும் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
அதன் வழியே தகுதியான எந்தவொரு மாணவரும் விடுபடாமலிருப்பதை உறுதிச் செய்ய முடியும் என CUMIG அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.



