
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-11,பினாங்கில் 13 மாதக் ஆண் குழந்தை ஒன்று, பராமரிப்பாளரின் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
ஆயர் ஈத்தாம், கம்போங் மெலாயுவில் உள்ள காப்பாளரின் வீட்டில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் உதடுகள் நீல நிறமாக மாறிய நிலையில் அக்குழந்தை சுயநினைவின்றி இருப்பதை காப்பாளர் கவனித்ததாகத், தீமோர் வாலோட் மாவட்டப் போலீஸ் தெரிவித்தது.
குழந்தையின் தாயாரும் பராமரிப்பாளரும் குழந்தையை உடனடியாகப் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 3.30 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக 44 வயதான பராமரிப்பாளரையும் குழந்தையின் தாயாரையும் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
குழந்தைப் பராமரிப்பாளருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தாயாருக்கு 3 நாட்கள் தடுப்புக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உடற்கூறாய்வு முடிவடைந்துள்ள போதிலும், இறப்பிற்கான துல்லியமான காரணம் ஆய்வக அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.
இச்சம்பவம் குறித்து 2001 சிறார் சட்டத்தின் கீழ் குழந்தையைப் பராமரிக்கத் தவறியது அல்லது கொடுமைப்படுத்தியது என போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.



