ஜோர்ஜ்டவுன், நவம்பர்-26, பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கி வரும் மானியத்தை, மாநில அரசு 4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும்.
பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் பினாங்கு அரசு ஆண்டுதோறும் 2 மில்லியன் ரிங்கிட்டை வழங்கி வருவது பாராட்டக்குரியது.
தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி, தமிழ் பாலர் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் மற்றும் பஞ்சாப் பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அப்பள்ளிகளில் வசதிக் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தி, மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலை உருவாக்க, கூடுதல் நிதி ஒதுக்கீடு துணைபுரியுமென்றார் அவர்.
இவ்வேளையில், நிலுவையில் உள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக்கான புதியக் கட்டட பிரச்சனையைத் தீர்க்க, சிறப்புக் குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு குமரேசன் பரிந்துரைத்தார்.
B40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நன்மைப் பயக்கும் வகையில், இலவச டியூஷன் மையங்களை அமைக்கலாமென்றார் அவர்.
அந்நிய நாட்டவர்களுக்கான வீட்டு வாடகை விவகாரத்திலும் தெளிவான வழிகாட்டிகள் உருவாக்கப்பட வேண்டுமென, பினாங்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போது அவர் சொன்னார்.